கட்சிக்கு உண்மையாக இருங்கள்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை
கட்சிக்கு உண்மையாக இருங்கள்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : ஜூன் 09, 2024 03:31 AM

சென்னை: ''கட்சிக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் உண்மையாக இருங்கள்,'' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவது, சாதாரணமான சாதனை அல்ல; வரலாற்று சிறப்பு மிக்க சாதனை. இந்த சாதனை வரலாற்றில், நீங்களும் இருக்கிறீர்கள் என்பது தான் உங்களுக்கு உள்ள பெருமை.
வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான், உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இத்தகைய வாய்ப்பை வழங்கிய கட்சிக்கும், உங்களுக்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கும் உண்மையாக இருங்கள். இது தான் நான் வைக்கும் வேண்டுகோள்.
தி.மு.க., என்ற கொள்கை குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லி செல்லும் நீங்கள், என் பெயரையும், கட்சியின் பெயரையும் காப்பாற்ற வேண்டும்.
ஒரு சில மாநிலங்களில், தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால், மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.
அதேநேரம், மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல, ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு செல்வாக்கை கூட பா.ஜ., பெறவில்லை. இந்த சூழலில், நாம் பார்லிமென்டில், தமிழகத்துக்கான கோரிக்கைகளை எடுத்து வைத்து வாதாட வேண்டும்; போராட வேண்டும்.
ஏராளமான வாக்குறுதிகளை, நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம்; அவை அனைத்தையும், பார்லிமென்டில் எடுத்து வைத்து, அதை செயல்பட வைக்க வேண்டும்.
பலவீனமான பா.ஜ., அரசை, நம்முடைய முழக்கங்கள் வழியாக, செயல்பட வைக்க வேண்டிய கடமை, உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. கட்சியில் கடந்த கால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். பார்லிமென்டுக்கு தவறாமல் போக வேண்டும்.
முழுமையாக இருந்து அனைவர் பேச்சையும் கேட்க வேண்டும். பா.ஜ.,வுக்கு சரிக்கு சமமாக இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் இருக்கப் போகின்றனர். இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. எனவே, எம்.பி.,க்களின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பர்.
அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து பேசி, நன்றி அறிவிப்புக்கான சுற்றுப்பயண திட்டத்தை விரைவில் தயார் செய்யுங்கள். அனைத்து பகுதிகளுக்கும் சென்று, மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அனைத்து எம்.பி.,க்களும், தங்களுக்கான அலுவலகத்தை துவக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். உங்கள் மொபைல் போன் எண், இ - மெயில் விபரங்களை, தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

