இருதரப்பு சமரசம்: நடிகர் தனுஷ் மீதான வழக்கு முடித்துவைப்பு
இருதரப்பு சமரசம்: நடிகர் தனுஷ் மீதான வழக்கு முடித்துவைப்பு
ADDED : ஜூன் 14, 2024 02:21 AM

சென்னை:வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக, நடிகர் தனுஷ் மீதான புகாரில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் லுனாவத் தாக்கல் செய்த மனு:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த நளினா ராமலெட்சுமிக்கு, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.
இந்த வீட்டை, 2022 முதல் வாடகைக்கு எடுத்து, வாடகை ஒப்பந்தத்தையும் சரிவர புதுப்பித்து வருகிறேன். கடந்த ஜனவரி வரை வாடகை ஒப்பந்தம் இருந்தது. 2023 ஆகஸ்டில், என்னை மொபைலில் தொடர்பு கொண்ட நபர்கள், நான் வாடகைக்கு வசித்து வரும் வீட்டை, நடிகர் தனுஷ் வாங்கியுள்ளார். எனவே, உடனே காலி செய்யுங்கள் என்று கூறினர்.
பின், திடீரென வீட்டுக்கு வந்த நபர்கள், வீட்டின் மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டிவிட்டுச் சென்றனர். முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்யும்படி கூறியது சட்ட விரோதம்.
இது தொடர்பாக, அண்ணா சாலை போலீசில் புகார் அளித்தேன். விசாரணையில், என்னுடன் வாடகை ஒப்பந்தம் செய்த உரிமையாளர், வீட்டை விற்றதும் மட்டு மின்றி, என்னிடம் தகவல் அளிக்காமல் தான் செலுத்திய பாதுகாப்பு வைப்புத் தொகையையும், மூன்றாம் நபருக்கு மாற்றியதாக தெரியவந்தது.
வாடகை ஒப்பந்தத் தின்படி, காலி செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாத அவகாசம் வழங்க வேண்டும் ஆனால், அவ்வாறு இல்லை. சட்டத்துக்கு மாறாக, வீட்டு விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷ், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ''மனுதாரருக்கும், எங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது. கடந்த 31ம் தேதி, வீட்டின் சாவி எங்கள் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தார்.

