ADDED : ஜூலை 06, 2024 02:59 AM
சென்னை:'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்' என, முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவு:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு,க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில், 1.16 கோடி மகளிர் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை பெறுகின்றனர். இந்த மாதத்தில் இருந்து புதிதாக, 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை தமிழக அரசு தரப்பில் தர இருக்கிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி, நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என, மக்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறது.
சமூக நீதி என்றாலே, அது தி.மு.க., அரசு தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதும், பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்ததும், தி.மு.க., ஆட்சி தான்.
நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டுகிறோம். சமூக நீதிக்கு எதிரான பா.ஜ., கூட்டணியை தோற்கடிப்பதன் வாயிலாக, சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.