தமிழகத்தில் விரைவில் பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமையும்: மத்திய அமைச்சர்
தமிழகத்தில் விரைவில் பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமையும்: மத்திய அமைச்சர்
ADDED : பிப் 22, 2025 09:01 PM
நாமக்கல்:''தமிழகத்தில் விரைவில், பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமையும்,'' என, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.
நாமக்கல் மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, 10 ஆண்டுகளில், தமிழக வளர்ச்சிக்கு மட்டும், 11 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்கின்ற, இரட்டை இன்ஜின் சர்க்கார் இருந்தால் தான், மாநிலம் வளர்ச்சி அடையும். அந்த வகையில், டில்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி சிறப்புடன் நடந்து வருகிறது. விரைவில் தமிழகத்திலும், பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமையும்.
தேசிய புதிய கல்விக்கொள்கை, இந்தியாவின் பிரபல அறிஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்களும், முழுமையான கல்வியறிவை பெற இந்த திட்டம் மிகவும் உதவும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்கள், 3வது மொழியை படிக்கும்போது, ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில், இரண்டு மொழி தான் கற்றுத்தருவோம் என, தமிழக அரசு கூறுவது ஏழை மாணவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

