மீஞ்சூரில் வாலிபர் கொடூர கொலை; சுடுகாட்டில் தலை இருந்ததால் பரபரப்பு
மீஞ்சூரில் வாலிபர் கொடூர கொலை; சுடுகாட்டில் தலை இருந்ததால் பரபரப்பு
ADDED : ஏப் 29, 2024 06:17 AM

மீஞ்சூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை அருகே, ரத்த காயங்களுடன் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு, தலை இல்லாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
உடனடியாக, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, வாலிபர் ஒருவர் இரண்டு கைகள் வெட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், உடல் கிடந்த இடத்தில் ரத்த கறைகள் ஏதும் இல்லாததால், கொலையாளிகள், வாலிபரை வேறு பகுதியில் கொலை செய்து, மீஞ்சூர் பஜார் பகுதியில் கொண்டு வந்து உடலை வீசிச் சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது.
தலை இல்லாத உடலை வைத்து கொலையுண்ட வாலிபரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராம சுடுகாட்டில், அஜய்குமார் என்பவரது சமாதியில், வாலிபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பதாக தகவல் கிடைத்தது. சமாதியில் இருந்த தலை, மீஞ்சூரில் கொலை செய்யப்பட்ட வாலிபருடையது என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், கொலையுண்ட நபர் பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின்குமார், 26, என கண்டறியப்பட்டது.
கண்டெடுக்கபட்ட உடல் மற்றும் உறுப்புகளை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணை யில், கடந்தாண்டு செங்குன்றம் அருகே கண்ணம் பாளையம் பகுதி உடற்பயிற்சி கூடத்தில், முன்விரோதம் காரணமாக பெருங்காவூரை சேர்ந்த விஜய், 26, ஸ்ரீநாத், 20, அஜய்குமார், 27, ஆகிய மூவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளியான செங்குன்றம் கருப்பு அஜித் என்பவருக்கும், நேற்று கொலை செய்யப்பட்ட அஸ்வின்குமாருக்கும் நட்பு இருந்து உள்ளது.
அதனால் தான், அஜய்குமாரின் சமாதி மீது, நேற்று கொலை செய்யப்பட்ட அஸ்வின்குமாரின் தலை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் கருப்பு அஜித்தின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை, அஸ்வின்குமார் தன் இன்ஸ்டாவில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனால், கோபம்அடைந்த அஜய்குமாரின் நண்பர்கள், நேற்று அஸ்வின்குமாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து, மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மீஞ்சூர் - சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் நிலையில், கொலை செய்யப்பட்ட இடம் எது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

