ADDED : ஏப் 14, 2024 02:18 AM
சென்னை : 'வன்னியர் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தலாம்; தடுக்க முடியாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சித்திரை திருநாள் பிறக்கிறது. சித்திரை முழுநிலவு வெற்றியை மட்டுமே பறைசாற்றும். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளாலும், சதிகளாலும் நமக்கான சமூக நீதி மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது.
கடந்த 2022 சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூக நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும் நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன. உச்ச நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியும், உழைக்கும் மக்களுக்கான சமூக நீதியான வன்னியர் இட ஒதுக்கீடு இன்னும் மலரவில்லை.
நமக்கான சமூக நீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. சமுக நீதிக்கான சக்திகளை சித்திரை சுட்டெரிக்கும்; நமக்கான சமூக நீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

