எஸ்.பி., குடும்பம் பற்றி அவதுாறு சீமான் உள்பட 25 பேர் மீது வழக்கு
எஸ்.பி., குடும்பம் பற்றி அவதுாறு சீமான் உள்பட 25 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2024 10:00 PM
திருச்சி:திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட, 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருப்பவர் வருண்குமார். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.பி., வருண்குமார் குறித்து கடும் விமர்சனம் செய்தார். இதையடுத்து, அவருக்கு, நஷ்டஈடு கேட்டு எஸ்.பி., வருண்குமார், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் வெகுண்ட நாம் தமிழர் கட்சியினர், எஸ்.பி., குறித்தும், அவரது மனைவி, தாயார் குறித்தும் சமூக வலைதளங்களில் தரக் குறைவாகவும், மிரட்டல் விடுத்தும், அவதுாறாகவும் பதிவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்.பி., வருண்குமார், திருச்சி தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக் ஆகியோர் துாண்டுதலின் பேரில், அக்கட்சியினர் இப்படி பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக் உள்பட, 25 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.பி., வருண்குமார் அளித்த புகாரின் பேரில், ஏற்கனவே அக்கட்சியைச் சேர்ந்த, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.