ADDED : ஜூன் 28, 2024 02:38 AM
சென்னை:சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விடுவிக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, சுங்கத்துறை அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எர்ணாவூரை சேர்ந்தவர் சுரேஷ்; தொழில் வர்த்தகர். 'மிர்த்திகாஸ்ரீ எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், சீனாவில் இருந்து, பீங்கான் தயாரிப்புக்கான பொருட்களை இறக்குமதி செய்துள்ளார். அந்த பொருட்கள், மே மாதம் சென்னை துறைமுகத்திற்கு வந்தன.
இந்த பொருட்களை விடுவிக்க, சென்னை ராஜாஜி சாலையில் செயல்படும், சுங்கத்துறை அலுவலக அதிகாரி மணீஷ் பாட்டீல், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பான, மொபைல் போன், 'ஆடியோ' ஆதாரத்துடன், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். டி.ஐ.ஜி., முருகன் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

