ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு தி.மு.க.,வினர் மீது வழக்கு
UPDATED : பிப் 24, 2025 09:00 AM
ADDED : பிப் 24, 2025 02:26 AM

பொள்ளாச்சி: ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகையில் கருப்பு மை பூசி ஹிந்தி எழுத்துக்களை அழித்ததால், தி.மு.க.,வினர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
'தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிப்பை கைவிட வேண்டும்; பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக, தி.மு.க., போராட்டம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நேற்று காலை 7:00 மணிக்கு தி.மு.க.,வினர் கூடினர்.
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் புகுந்த அவர்கள், அங்குள்ள பெயர் பலகையில், 'பொள்ளாச்சி ஜங்ஷன்' என, இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்து, எதிர்ப்பை வெளிக்காட்டினர். ரயில்வே போலீசார், தி.மு.க.,வினர் ஐந்து பேர் மீது வழக்கு பதிந்தனர். பெயர் பலகையில், 'பொள்ளாச்சி ஜங்ஷன்' என, ஹிந்தியில் உடனடியாக எழுதப்பட்டது. இதேபோல, பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை, அழித்தனர்.
கண்டனம்
ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை தி.மு.க.,வினர் அழித்ததற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: கருணாநிதிக்கு வெளியிடப்பட்ட, 100 ரூபாய் நாணயத்தில் ஹிந்தி இருக்கிறது. 'கலைஞர் எம்.கருணாநிதி கீ ஜன்ம சதாப்தி' அதாவது, கருணாநிதி நுாற்றாண்டு என, ஹிந்தியில் உள்ளது.
நாணயம் வெளியீட்டின் போது, இருமொழியே போதும்; ஹிந்தி வேண்டாம் என மறுக்காதது ஏன்? பா.ஜ., எதிர்ப்பை, அரசியல் நாடகத்திற்கு பயன்படுத்தும் தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரை அழைத்தது ஏன்?
ரயில் நிலையத்தில் ஹிந்தியை அழிக்கும் போலி மொழி எதிர்ப்பு அரசியல் கோமாளிகள், கருணாநிதி நாணயத்தில் ஹிந்தி இருக்கிறது.
வேண்டாம்
இந்த நாணயமும் வேண்டாம்; நாணய வெளியீட்டு விழாவும் வேண்டாம் என புறக்கணித்திருக்கலாமே... 100 ரூபாய் நாணயத்தை, 6,000 ரூபாய்க்கு வாங்கிய அதிமேதாவிகள், இன்று நடந்து கொள்வது சந்தர்ப்பவாத அரசின் தோல்வியை மறைக்கும் மடைமாற்ற அரசியல்.
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி: தி.மு.க.,வினர் உண்மையிலேயே ஹிந்தியை எதிர்க்க வேண்டும் என்றால், ரயில் நிலையங்களில், ஹிந்தி பெயர்களை அழிக்கும் நாடகத்தை நிறுத்தி விட்டு, ஹிந்தி கற்றுக் கொடுக்கும், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம் நடத்தலாம். அந்த பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுத்தால், பள்ளியை இழுத்து மூடுவோம் என்று கோஷமிடலாம்.
மக்களும், கல்வி வியாபாரம் செய்யும் தி.மு.க., தலைவர்களும், உங்களை நன்றாக கவனித்துக் கொள்வர். அதேபோல், ரயில் நிலையம் சென்று சிரமப்பட்டு ஹிந்தி எழுத்தை அழிப்பதற்கு பதிலாக, உங்கள் வீட்டில், 500 ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்தை அழியுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

