பதிவுச் சட்டப் பிரிவை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பதிவுச் சட்டப் பிரிவை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூலை 12, 2024 08:20 PM
மதுரை:அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்ய தடை செய்யும் பத்திரப் பதிவுச் சட்டப் பிரிவிற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராமராஜ் தாக்கல் செய்த மனு:
சோலைசேரியில் 15 சென்ட் நிலம் வாங்கினேன். பதிவு செய்ய சேத்துார் சார் - பதிவாளர் அலுவலகம் சென்றேன். பத்திரப் பதிவுச் சட்டம் - 22 ஏ2, பிரிவின்படி அங்கீகாரமற்ற மனை இடங்களை பதிவு செய்ய இயலாது எனக்கூறி சார் - பதிவாளர் நிராகரித்தார். இது சொத்துக்களை விற்பனை செய்வதை தடை செய்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி ஒவ்வொருவரும் சொத்துக்களை வாங்க, விற்பனை செய்ய உரிமை உண்டு.
பத்திரப் பதிவு சட்டத்தின் இப்பிரிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. இதன் வாயிலாக சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. இச்சட்டப் பிரிவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர், பதிவுத்துறை தலைவர், விருதுநகர் மாவட்ட பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

