ADDED : மே 14, 2024 11:25 PM
சென்னை:காவிரி மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்பதற்கு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். நடப்பாண்டு, 79 டி.எம்.சி., நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.
நீர் வழங்கும் தவணைக்காலம், இம்மாதம் 31ம்தேதியுடன் முடிகிறது. கர்நாடகா 96 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில், ஜூன் மாதம் குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கவுள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், பாசனத்திற்கு திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாளை காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டமும், 21ல், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டமும் நடக்கவுள்ளது.
டில்லியில் நடக்கவுள்ள இக்கூட்டங்களில் பங்கேற்க வரும்படி, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மே மாதம் சுற்றுச்சூழல் ஒதுக்கீட்டிற்கான 2.50 டி.எம்.சி., நீரை திறக்க உத்தரவிடப்பட்டது. அதை, கர்நாடகா முறைப்படி வழங்காத நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்ப, தமிழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

