ADDED : ஏப் 29, 2024 06:06 AM

மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் வாயிலாக சேலம், நாமக்கல், ஈரோடு உட்பட, 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
கடந்த ஆண்டு, தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை கை கொடுக்காததால் டெல்டா, சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்படவில்லை.
நேற்று அணை நீர்மட்டம், 53.81 அடி, நீர் இருப்பு, 20.29 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு நேற்று, 82 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து தினமும், 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
திறப்பில் இதே நிலை நீடித்தால், 10 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி., வீதம், மாதத்துக்கு, 3 டி.எம்.சி., குறையும். அணை, கதவணை மின் நிலைய இருப்பு நீரை, மூன்று மாதங்களுக்கு மேல் வழங்கி, 12 டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதற்குள் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழை பெய்தால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், தற்போது மழையின்றி தமிழகம் கர்நாடகா எல்லை காவிரியாற்றில் தண்ணீர் ஓடை போல் வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம், 101.49 அடி, நீர் இருப்பு, 66.78 டி.எம்.சி.,யாக இருந்தது.
வினாடிக்கு, 334 கன அடி நீர் வந்தது. அணையில் போதிய நீர் இருந்ததால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. நடப்பாண்டில் இரு மடங்கு நீர் குறைவாக உள்ளது.

