ராஜேந்திர பாலாஜி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை
ராஜேந்திர பாலாஜி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை
ADDED : ஏப் 11, 2024 10:50 PM
சென்னை:முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக்கோரி, விஜய நல்லதம்பி என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், ''வழக்கின் புலன் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சிவகாசி பஸ் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டதாக, ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி, ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

