ADDED : ஜூலை 09, 2024 06:42 AM

சென்னை : ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்தில் இருப்பதால், கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில், கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில் பட்டியலின சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள், தேசிய பட்டியலின ஆணையத்திலும், மனித உரிமை ஆணையத்திலும் முறையிட உள்ளனர்.
திட்டமிட்டு
குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட, 17 சம்பவங்கள் குறித்து தெரிவிக்க உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம், கல்யாண வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வது போல் திட்டமிட்டு நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளதால், கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன், பா.ஜ., நிர்வாகியின் கணவரை பட்டப்பகலில் கூலிப்படை வெட்டியது. போலீசில் ரவுடிகளை கண்காணிப்பது, அரசியல்வாதிகளுக்கு உள்ள அச்சுறுத்தலை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் முறையாக நடப்பது கிடையாது.
தமிழகத்தில் நிறைய கொலைகள் சரண்டரில் தான் முடிகின்றன. இங்கு கொலை நடந்தால் காவல்துறை உயர் அதிகாரிகள், வழக்கறிஞரிடம் பேசி, வேறு நபர்களை சரணடைய வைக்கின்றனர்.
அவ்வாறு சரணடையும் குற்றவாளிகள், சிறையில் இருப்பது கிடையாது. விரைவில் வெளியே வந்து, வேறு சம்பவங்களை செய்கின்றனர். போலீசாரின் அடிப்படை பணியை மாற்ற வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளிகள் பா.ஜ.,வினராக இருப்பதாக, செல்வப்பெருந்தகை சொல்கிறார். அதுகுறித்து எனக்கு தெரியவில்லை; அவர், ரவுடி பட்டியலில் இருப்பதால், அவருக்கு தெரிந்திருக்கலாம்.
'தி.மு.க.,வுக்கு, பா.ஜ.,தான் முதல் எதிரி' என, எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, பா.ஜ.,வினர் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டால், தி.மு.க., அரசு விட்டு விடவா போகிறது?
மாற்றுவதால் தீராது
தமிழகத்தில் அதிக கைது சம்பவங்கள், பா.ஜ.,வினர் மீதுதான் நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய முன்வர வேண்டும்.
அனைத்து துறைகளைப் போல போலீசிலும் கருப்பு ஆடுகள் உள்ளன. போலீசாருக்கு தேவையான முழு சுதந்திரத்தை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
'இங்கு கூலிப்படைக்கு இடமில்லை' என்ற நிலை வரவேண்டும். அதிகாரியை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை தீராது.
தமிழகத்தில் 14 நாட்களில், 134 கொலைகள் நடந்திருப்பதால், அபாயகரமான சூழல் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

