தலைமை செயலக கட்டுமானம் அப்பீல் மனு வாபஸ் பெற அனுமதி
தலைமை செயலக கட்டுமானம் அப்பீல் மனு வாபஸ் பெற அனுமதி
ADDED : மார் 28, 2024 10:31 PM
-சென்னை:தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
ஆவணங்களை, ஆதாரங்களை பரிசீலித்து, ஆரம்ப முகாந்திரம் இருந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விரிவான விசாரணை நடத்த, முந்தைய அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கில், அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெற, இப்போதைய அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தன்னையும் சேர்க்கக்கோரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முதல்வர் மற்றும் அமைச்சர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய, அரசின் மனு மீதான உத்தரவை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மாநில அரசு முடிவெடுத்து புகாரில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த இடைக்கால உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின், மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தற்போது, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கை வாபஸ் பெறுவதற்கான காரணங்களும் கூறப்பட்டுள்ளன.
தாமதமாக மனு தாக்கல் செய்ததால், மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என, இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும், ஒரு தரப்பினர் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என, நீதிமன்றமும் நிர்பந்திக்க முடியாது.
எனவே, மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்கிறோம். வழக்கு வாபஸ் பெறப்படுவதால் இடையீட்டு மனு தேவையற்றது என்பதால், அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

