2026ல் புதிய தமிழகம் கட்சியை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி பேச்சு
2026ல் புதிய தமிழகம் கட்சியை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி பேச்சு
ADDED : பிப் 27, 2025 09:12 AM

மதுரை ; '2026 சட்டசபைதேர்தலில் புதிய தமிழகம் கட்சியை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சியே மலரும்' என அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
2009ல் தமிழக அரசு கொண்டு வந்த உள் இடஒதுக்கீடு சட்டத்தால் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் பாதிப்படைகின்றனர். இடஒதுக்கீடு வழங்குவதில் எந்தவொரு சமுதாயத்திற்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதற்கு மாறாக பட்டியல் பிரிவினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீத இடஒதுக்கீட்டை அருந்ததியினர் பிரிவுக்கு வழங்குகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் பதவிகளுக்கு பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாத அவலநிலை உள்ளது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஆணையமே இன்னும் உருவாக்கப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் 8 தொகுதிகள் குறைக்கப்படும் என்ற பீதியை கிளப்புகிறார். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து திசை திருப்ப மத்திய அரசு, தமிழக உரிமையை பறிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். எனவே முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது.
மணல், கனிமவளம், பத்திரப்பதிவுகளில் நடக்கும் கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற நிலையுள்ளது. 2026ல் கூட்டணி ஆட்சி தான் மலரும். தேசிய, மாநில கட்சிகள் என்ற பாகுபாடின்றி புதிய தமிழகம் உள்ளிட்ட பல கட்சிகளும் சேர்ந்து தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
அரசுப்பள்ளியில் படிப்பவர்கள் மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதில் நியாயம் இல்லை.
தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் இருமொழியை மட்டும் கற்கின்றனர் என்பதை புள்ளி விவரங்களுடன் வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா. பல மொழிகளை கற்றால் தான் மாணவர்கள் எதிர்காலத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.