அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்' 'ஜிபே', கியூஆர்கோடு' மூலம் வசூல்
அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்' 'ஜிபே', கியூஆர்கோடு' மூலம் வசூல்
ADDED : மே 18, 2024 01:31 AM
சிவகங்கை:அரசு பஸ்களில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை' கிடப்பில் போட்டு, புதிதாக எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்' வாங்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கும்பகோணம் உட்பட எட்டு கோட்டங்களின் கீழ் 22 மண்டல அலுவலகம், 300 க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், அலுவலர், கண்டக்டர், டிரைவர், டெக்னிக்கல் ஊழியர் என 1.35 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 20 ஆயிரம் பஸ்கள் ஓடுகின்றன.
ஏற்கனவே பஸ்சுக்கு தலா 2 டிக்கெட் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டு அதன் மூலம் டிக்கெட் தரப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த இயந்திரங்கள் கிடப்பில் போடப்பட்டு பழையபடி அச்சிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய வங்கி ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அனைத்து பஸ்களிலும் எலக்ட்ரானிக் மெஷின்' மூலம் டிக்கெட் வழங்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது: தேசிய வங்கியே எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷினை' வழங்குகிறது. ஜி-பே', கியூஆர் கோட்' மூலம் பஸ் கட்டணம் செலுத்தலாம். ஜூலை முதல் கோட்டம் வாரியாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பயணிகள் செலுத்தும் அனைத்து பணமும் வங்கியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். கருவியில் உள்ள ஜி.பி..எஸ்., மூலம் பஸ் எங்கு செல்கிறது என அறியலாம். ஒரு பஸ்சிற்கு 2 எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்' வழங்கப்படும் என்றார்.

