ஸ்ரீவைகுண்டத்தில் மாணவர் மீது தாக்குதல்; அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவு
ஸ்ரீவைகுண்டத்தில் மாணவர் மீது தாக்குதல்; அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவு
ADDED : மார் 12, 2025 04:22 AM
சென்னை : ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.சி., மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.,க்கு, தமிழக எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரராஜ்; பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் தேர்வு எழுத பஸ்சில் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் என்ற இடத்தில் பஸ்சை வழிமறித்த ஒரு கும்பல், தேவேந்திரராஜை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
படுகாயமடைந்த மாணவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
பட்டியலின மாணவர் தேவேந்திரராஜை, சிலர் ஜாதி வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது, முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
மாணவரை அரிவாளால் வெட்டிய இருவரும் சிறுவர்கள். இவர்கள் தன்னிச்சையாக இந்த கொடூரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை. வேறு சிலரின் துாண்டுதலால், இதை செய்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்றங்கள் செய்தால், சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கே அனுப்ப முடியும் என்பதால், ஜாதிய, சமூக விரோதிகள் திட்டமிட்டே சிறுவர்களை வைத்து, தேவேந்திரராஜை வெட்டியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
இது தொடர்பாக, துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல், 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.