நெல் கொள்முதலுக்கு லஞ்சம் தடுக்க அமைச்சரிடம் புகார்
நெல் கொள்முதலுக்கு லஞ்சம் தடுக்க அமைச்சரிடம் புகார்
ADDED : செப் 10, 2024 10:31 PM
சென்னை:தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், உணவு அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து பேசிய பின் கூறியதாவது:
கடலுார் மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, வடபாதி கிராமத்தில், சந்தோஷ் என்ற விவசாயி, வளச்சகாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தான் உற்பத்தி செய்த நெல் மூட்டைகளை விற்க கொண்டு சென்றார்.
அங்கிருந்த ஊழியர்கள், சிப்பத்திற்கு, 55 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்க, நெல்லை கொள்முதல் செய்ய மறுத்ததுடன், தரக்குறைவாக பேசி உள்ளனர். இதனால் அவர் பூச்சி மருந்து குடித்துள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் பணம் எதுவும் தர வேண்டாம் என, அரசு கூறிவரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட எடைபோடும் ஊழியர்கள் மீது மட்டுமின்றி, மண்டல மேலாளர் வரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி சந்தோஷுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை, தடுத்து நிறுத்த வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவித்தேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

