ADDED : மார் 03, 2025 06:33 AM

சென்னை ; மத்திய சென்னை பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் மற்றும் சார் - பதிவாளர் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பதிவுத்துறையில் சார் - பதிவாளர் அலுவலக நிலையில், முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட சில புகார்கள் மீது, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலான முறைகேடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், மத்திய சென்னை மாவட்டத்தில், பத்திரப்பதிவு மற்றும் வருவாய் இழப்பு தொடர்பான புகார்கள் வந்துஉள்ளன.
இதுகுறித்து நடந்த விசாரணை அடிப்படையில், மத்திய சென்னை பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., - டி.மகேஷ், திண்டுக்கல் பதிவு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, பல்வேறு புகார்கள் அடிப்படையில், திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் பிரகாஷ், அரியலுாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பத்துார் சார் - பதிவாளர் ராம், தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்து உள்ளார்.