கான்கிரீட் சாலை, மரம் நடுதல் அவசியம் 'எம் --- -சாண்ட்' ஆலைகளுக்கு கட்டுப்பாடு
கான்கிரீட் சாலை, மரம் நடுதல் அவசியம் 'எம் --- -சாண்ட்' ஆலைகளுக்கு கட்டுப்பாடு
ADDED : ஆக 10, 2024 12:54 AM
சென்னை:'கான்கிரீட் சாலை, மரங்கள் நடுதல், காற்று மாசை தடுக்க நவீன உபகரணங்கள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, ஜல்லி மற்றும் எம் - -சாண்ட் உற்பத்தி ஆலைகள் பின்பற்றுவதை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'சென்னையை அடுத்த எருமையூரில், அருகருகே பல்வேறு ஜல்லி கற்கள், எம் - சாண்ட் ஆலைகள் உள்ளன. சரியான சாலை வசதிகள் இல்லாததால், இந்த ஆலைகளுக்கு வந்து செல்லும் லாரிகளால் காற்று மாசு ஏற்பட்டு, அருகில் வசிப்பவர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
'விதிகளை மீறி செயல்படும் ஜல்லி கற்கள், எம்- - சாண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, அப்பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
ஜல்லி கற்கள், எம் - -சாண்ட் ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
ஆய்வு
இந்த ஆலைகள் அதிகமாக இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, இத்தனை ஆலைகளை தாங்கும் அளவுக்கு பொருத்தமான இடம் தானா என்பதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீர்மானிக்க வேண்டும்.
ஆலைகளை சுற்றியுள்ள குடியிருப்புகள், பொது கட்டடங்கள், நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலையிலிருந்து ஜல்லி கற்கள், எம்- - சாண்ட் ஆலைகளுக்கு லாரிகள் செல்லும் சாலைகள் அனைத்தும், 'கான்கிரீட்' சாலைகளாக மாற்றப்பட வேண்டும். கற்களை உடைக்கும் போது எழும் துாசால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
மருத்துவ முகாம்
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நவீன உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
இந்த ஆலைகள் அமைந்துள்ள தொழில் வளாகத்தில், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இதற்கான பணத்தை, வனத்துறைக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.
இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும்.
விதிகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.