ADDED : ஜூலை 23, 2024 09:44 PM
பழனி:பழனி த.மா.கா., அலுவலகம், மூப்பனார் பவன் என்ற பெயரில், ஆர்.எப்., ரோட்டில் செயல்படுகிறது. த.மா.கா., நகர் தலைவராக சுந்தர் செயல்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விலகி, மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து, நேற்று சுந்தர் காங்., தொண்டர்களுடன் த.மா.கா., அலுவலகத்தை கைப்பற்றினார்.
இதையறிந்து த.மா.கா.,வினர், மூப்பனார் பவன் முன் திரண்டனர். காங்., கூட்டணி கட்சியினரும் கூடினர். பா.ஜ.,வினரும் அங்கு வந்தனர். இதனால் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட டி.எஸ்.பி., தனஞ்செயன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் தாசில்தார் சக்திவேலன் தலைமையில், வருவாய்த்துறையினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அப்போது பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் செல்ல, அங்கிருந்த காங்., கட்சியினர் பா.ஜ.,வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் மோதல் சூழல் ஏற்பட்டது; போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

