கோவில்பட்டி காந்தி மண்டபம் மீட்டெடுக்க காங்கிரஸார் முயற்சி
கோவில்பட்டி காந்தி மண்டபம் மீட்டெடுக்க காங்கிரஸார் முயற்சி
ADDED : பிப் 26, 2025 10:26 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காங். கட்சிக்கு சொந்தமான காந்தி மண்டபத்தை கட்சியின் தலைமை கைவிட்டு விட்டதாக தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காந்திய சிந்தனைகளை பரப்பும் வகையில், காங். கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காந்தி நினைவு மண்டபகங்கள் உள்ளன. அந்த வகையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 1951ல், சுமார் 67 சென்ட் நிலத்தில் காந்தி மண்டபம் அமைக்கப்பட்டது.
அந்த மண்டபம், தனி நபர்கள் சிலர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் மண்டபத்தை சுற்றியுள்ள கடைகளில் வாடகை வசூலித்து வருவதாகவும் காங். நிர்வாகிகள் திடீர் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன் மீது நடவடிக்கைக் கோரி, கோவில்பட்டியை சேர்ந்த காங். நிர்வாகி அய்யலுசாமி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சமீபத்தில் புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டியில் காந்தி மண்டபம் அமைப்பதற்காக, அரசிடம் இருந்து 670 ரூபாய்க்கு வாங்கப்பட்ட 67 சென்ட் நிலத்தில், தற்போது 15 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது. அந்த இடத்தில் 5 கடைகள் உள்ளன. மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை வருவாய் கிடைக்கிறது. காங்., கட்சிக்கு சொந்தமான அந்த சொத்தை, தனி நபர்கள் சிலர் அனுபவித்து வருகின்றனர்.
மண்டபத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில், ரூ. 2 கோடி இருக்க வேண்டும்; ஆனால், ரூ. 35 லட்சம் மட்டுமே உள்ளது.
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளையின் பொருளாளர் மூலம் எந்தவித அனுமதியும் இல்லாமல், வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. காங். கட்சிக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு, கட்சியின் சொத்தாக அறிவித்து நிர்வாகம் செய்ய வேண்டும். அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை நிர்வாகி சுந்தர்ராஜ் என்பவர் கோவில்பட்டி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தார்.
அதில், 'காந்திய கொள்கைக்கு விரோதமாக மண்டப வளாகத்தில் உள்ள கடைகளில் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை தடுக்க வேண்டும். தமிழக காங். கமிட்டிக்கு சொந்தமான காந்தி மண்டபத்தை மீட்டு, கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

