ராஜ்யசபா எம்.பி., 'சீட்'டுக்காக தி.மு.க.,வுக்கு காங்., அழுத்தம் *டில்லியில் காய்நகர்த்தும் தமிழக தலைவர்கள்
ராஜ்யசபா எம்.பி., 'சீட்'டுக்காக தி.மு.க.,வுக்கு காங்., அழுத்தம் *டில்லியில் காய்நகர்த்தும் தமிழக தலைவர்கள்
ADDED : பிப் 27, 2025 07:10 PM
லோக்சபா தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட திருநாவுக்கரசர், விஸ்வநாதன், ஜெயகுமார் ஆகியோர், டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து, ராஜ்யசபா எம்.பி., பதவி மற்றும் மாநில தலைவர் பதவி கேட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக, 15 அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில் டில்லி சென்ற, அந்த 15 பேரும், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், கட்சி தலைவர் கார்கேவை சந்திக்க முடியாமல், ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், வரும் ஜூனில் ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடக்க உள்ளதால், தி.மு.க., ஆதரவுடன் அப்பதவியை பெற, தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.,க்கள் செல்லக்குமார், விஸ்வநாதன், ஜெயகுமார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், இவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ராஜ்யசபா பதவியை விரும்புகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ஒரு பதவியை வழங்கினால் தான், இவர்கள் ஆசை நிறைவேறும்.
அதற்காக, காங்கிரஸ் மேலிடத் தலைமையை தி.மு.க.,விடம் பேச வைக்கும் முயற்சியாக, திருநாவுக்கரசர், விஸ்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர். கார்கேவை தனித்தனியாக இம்மூவரும் சந்தித்து பேசினர்.
- நமது நிருபர் -