ஒற்றை நபருடன் நுகர்வோர் நீதிமன்றம் செல்லாததாக அறிவிக்க வழக்கு
ஒற்றை நபருடன் நுகர்வோர் நீதிமன்றம் செல்லாததாக அறிவிக்க வழக்கு
ADDED : ஆக 24, 2024 01:37 AM
சென்னை:உயர் நீதிமன்றத்தில், சென்னை கே.கே.நகரை சேர்ந்த விமல் மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, தேசிய, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், தலைவர், நீதித்துறை உறுப்பினர், நிபுணத்துவ உறுப்பினருடன் செயல்பட வேண்டும்.
இருப்பினும், தற்காலிக தேவைகளுக்காக ஒற்றை உறுப்பினருடன் செயல்பட, நுகர்வோர் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பதவி வகித்து வருகிறார்.
நீதித்துறை உறுப்பினர் ஒருவரும் இருக்கிறார். கடந்த ஓராண்டாக, அந்த ஒற்றை உறுப்பினருடன் மாநில நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுகிறது. இது, சட்ட விரோதமானது. எனவே, ஒற்றை உறுப்பினருடன் மாநில நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட அனுமதிக்கும் சட்டப்பிரிவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என, அறிவிக்க வேண்டும்.
போதுமான எண்ணிக்கையில், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் உறுப்பினர்களை சரியான நேரத்தில் நியமிக்காமல் புறக்கணித்தது வருந்தத்தக்கது. இந்த நடவடிக்கையால் நுகர்வோர் பாதிக்கப்படுவர்.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக வழக்குகளை விசாரிக்கவும், முடிவுகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும். ஒற்றை உறுப்பினர் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் செல்லாது என, அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு', மத்திய, மாநில அரசுகள், மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர், நான்கு வாரத்துக்குள் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.