ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு சர்ச்சைகோயில் திருவிழா வரிவசூல் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு சர்ச்சைகோயில் திருவிழா வரிவசூல் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 10, 2024 05:56 AM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கோயில் திருவிழாவை பாகுபாடின்றி நடத்த வேண்டும். ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களிடம் வரி வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கமுதி அருகே புதுக்கோட்டை நாகராஜன் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 14 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் என்னை மற்றும் 33 குடும்பங்களை சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இவ்வாறு செய்துள்ளனர். அவர்கள் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள்.
திருவிழாவிற்கு வரி செலுத்த நானும் 33 குடும்பங்களை சேர்ந்தவர்களும் முன்வந்தோம். விழா குழுவினர் மற்றும் சிலர் மறுத்துவிட்டனர்.இது எங்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக மனித உரிமை கமிஷன், டி.ஜி.பி.,ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினோம். எனது மற்றும் 33 குடும்பங்களிடம் திருவிழா தலைக்கட்டு வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.வேல்முருகன்: மனுதாரர் மற்றும் 33 குடும்பங்களிடம் வரி வசூலிக்கப்படுவதை கமுதி தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்ய வேண்டும். ஊரைவிட்டு ஒதுக்கி வைக்காமல், பாகுபாடின்றி திருவிழா நடத்தப்படுவதை கலெக்டர், எஸ்.பி.,பரமக்குடி ஆர்.டி.ஓ.,உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.