சுங்கத்துறை கெடுபிடி: தமிழக விமான நிலையங்களில் 6,043 பேருக்கு 'நோட்டீஸ்'
சுங்கத்துறை கெடுபிடி: தமிழக விமான நிலையங்களில் 6,043 பேருக்கு 'நோட்டீஸ்'
UPDATED : பிப் 28, 2025 04:43 AM
ADDED : பிப் 27, 2025 11:29 PM

திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், கடந்தாண்டு சுங்கத் துறையால், 6,043 பேருக்கு, 'டிடென்ஷன் நோட்டீஸ்' எனும் கைது எச்சரிக்கை நோட்டீஸ் தரப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுங்கத் துறை செயல்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்கு, சுங்க வரி விதிக்கப்படும். கடத்தல் பொருட்களை எடுத்து வந்தால், அவர்களை கைது செய்யும் அதிகாரம், சுங்க அதிகாரிகளுக்கு உள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பொருட்களை பயணியர் எடுத்து வந்தால், அந்த பயணியருக்கு, கைது எச்சரிக்கை நோட்டீஸ் தரப்படும். இதில், பயணியடரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள், பறிமுதல் செய்ததற்கான காரணங்கள் இருக்கும். தொடர் விசாரணைக்கு, அந்த பயணி ஒத்துழைக்க வேண்டும்.
இந்நிலையில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால், 6,043 பயணியருக்கு கைது எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, சுங்கத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் பயணியர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தங்கம் எடுத்து வருவது உள்ளிட்ட செயல்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் குறைந்த விலையில், வரி இல்லாமல் கிடைப்பதால், பலர் ஆபரணங்களை வாங்கி வருகின்றனர். இதற்கென சில வரைமுறைகள் உள்ளன. அதன்படி தான் கொண்டு வர வேண்டும். மீறி எடுத்து வருவோருக்கு, கைது எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும்.
சந்தேகிக்கும்படியான பயணியரிடம் இருந்து கைப்பற்றப்படும் பொருட்களுக்கும், இந்த நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் அதற்கான சுங்க வரியை செலுத்திய பின், பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, சட்டவிரோதமாக கொண்டு வந்தால், அவர்கள் கைது செய்யப்படுவர்.
பொருட்களுக்கு சரியான சுங்க வரி செலுத்தாதது, போலி ஆவணங்கள் அல்லது நகல் ஆவணங்களுடன் அனுப்புதல், தப்பித்தல் போன்ற நிகழ்வுகளில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயணியர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும்போது, மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -