பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் சோமண்ணா
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் சோமண்ணா
ADDED : பிப் 28, 2025 12:07 AM

தஞ்சாவூர்:''தமிழகம், கர்நாடகா, கேரளாவில் பா.ஜ., ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அரசு, அரசியல் செய்யாமல், நிறைய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது,'' என, மத்திய இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்ட வளர்ச்சி பணிகளை நேற்று மாலை, மத்திய ரயில்வே மற்றும் நீர்வளத் துறை இணை அமைச்சர் சோமண்ணா ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
ரயில்வே துறையில், தமிழகத்தில் 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2024 - 25ம் ஆண்டை விட, 300 கோடி ரூபாய் கூடுதலாகும்.
தமிழகத்தில், 10 ஆண்டுகளில், 1,303 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2,242 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆண்டுகளில், 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், ரயில்பாதை மின்மயமாக்கல் பணி, 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் முடிக்கப்படும். தமிழத்தில், பல்வேறு மாவட்டங்களில், 33,467 கோடி ரூபாய் மதிப்பில், 22 ரயில்வே திட்ட பணி நடைபெறுகிறது.
அம்ருத் பாரத் நிலைய திட்டத்தில், 77 ரயில்வே ஸ்டேஷன்களில், 2,950 கோடி ரூபாய் மதிப்பில், மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில், ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக, 1,460 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்டத்தில்,12.37 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன், 6.50 கோடி ரூபாய் மதிப்பிலும், புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன், 13.50 கோடி ரூபாய் மதிப்பிலும், காரைக்கால், மாகி ரயில்வே ஸ்டேஷன்களில், 109 கோடி ரூபாயிலும் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம், கர்நாடகம், கேரளாவில் பா.ஜ., ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அரசு அரசியல் செய்யாமல் நிறைய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் - அரியலுார் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.