டி.ஜி.பி., உத்தரவால் மாவட்ட, கிளை சிறையில் பணிபுரிபவர்கள் 'ஷாக்': மத்திய சிறைகளுக்கு மட்டுமே காவலர்கள் இடமாற்றம்
டி.ஜி.பி., உத்தரவால் மாவட்ட, கிளை சிறையில் பணிபுரிபவர்கள் 'ஷாக்': மத்திய சிறைகளுக்கு மட்டுமே காவலர்கள் இடமாற்றம்
ADDED : ஏப் 26, 2024 01:20 AM

மதுரை : தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் துணை ஜெயிலர் வரை பணிபுரியும் மத்திய சிறையில் இருந்து மற்றொரு மத்திய சிறைக்கு மட்டுமே இடமாற்றப்படுவர் என்ற டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவால் மாவட்ட, கிளை சிறைகளில் பணிபுரிபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 4 பெண்கள் சிறைகள், 6 மாவட்ட சிறைகள், 2 திறந்தவெளி சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. மத்திய சிறைகளின்கீழ் உள்ள மாவட்ட, கிளை சிறைகளில் நுாற்றுக்கணக்கான காவலர்கள், உதவி ஜெயிலர் பணிபுரிகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் இடமாற்றப்படுவது வழக்கம். இத்துறை இயக்குநராக சைலேந்திரபாபு இருந்தபோது கவுன்சிலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கினார்.
அடுத்து வந்த அமரேஷ் பூஜாரி, சிறை நிர்வாகத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்ததோடு காவலர்களின் நலனிலும் அக்கறை காட்டினார். இதனால் அவர் இடமாற்றப்பட்டார். தற்போதைய டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் நிர்வாக பணிகளில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் துணை ஜெயிலர்களுக்கு மத்திய சிறையில் இருந்து மற்றொரு மத்திய சிறைக்கு மட்டுமே இடமாற்றம் செய்யும் வகையில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் விரும்பும் 3 மத்திய சிறைகளை குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது ஒன்றில் இடமாற்றப்படுவர்.
அதேசமயம் மாவட்ட, கிளை சிறைகளில் பணிபுரிபவர்களுக்கு அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சிறை அதிகாரிகளாக பார்த்து அவர்கள் விரும்பும் இடங்களுக்கு காவலரை இடமாற்றம் செய்ய உள்ளதால் மாவட்ட, கிளை சிறைகளில் பணிபுரிபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சில ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வெளி மாவட்ட, கிளை சிறைகளில் பணிபுரிகிறோம். 3 ஆண்டுகளுக்கு பிறகு விரும்பும் இடங்களுக்கோ அல்லது சொந்த ஊர் அருகில் உள்ள சிறைகளுக்கோ இடமாற்றப்படுவோம் என காத்திருந்தோம்.
ஆனால் டி.ஜி.பி.,யின் உத்தரவால் எங்களின் இடமாற்றம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிகாரிகள் விரும்பிய இடங்களுக்கு எங்களை பந்தாடினால் எங்களின் உடல்நிலை பாதிக்கும்.
ஏற்கனவே 50 வயதை கடந்தும் இன்னும் 2 ஸ்டார் அந்தஸ்துகூட பெற முடியாமல் மனஉளைச்சலில் உள்ளோம். இச்சூழலில் இந்த இடமாற்றம் குழப்பம் மேலும் எங்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி உள்ளது.
முன்பு இருந்தது போல் கவுன்சிலிங் நடத்தி விரும்பிய இடங்களுக்கு இடமாற்றினால் மகிழ்ச்சியாக பணிபுரிவோம். உடல்நிலையும் பாதிக்காது. குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுகுறித்து டி.ஜி.பி., பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

