மளிகை கடையில் காரால் மோதிய உதவி பேராசிரியருக்கு தர்ம அடி
மளிகை கடையில் காரால் மோதிய உதவி பேராசிரியருக்கு தர்ம அடி
ADDED : மார் 02, 2025 03:23 AM
சிதம்பரம் : சாக்லேட் வாங்கியதற்கு பணம் கேட்ட தகராறில், மளிகை கடைக்குள் காரை விட்டு மோதிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம், பெரிய காஜியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 29; காசுக்கடை தெருவில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு, நாட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்த அண்ணாமலை பல்கலை உதவி பேராசிரியர் பாலச்சந்திரன், 47, சாக்லேட் வாங்கினார். மறதியாக பணம் கொடுக்காமல் சென்றார். அவரிடம், கடை ஊழியர் ரவி பணம் கேட்டதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து, ரவி, பிரபாகரன் இருவரும் சேர்ந்து, பாலச்சந்திரனை தாக்கினர். தலையில் படுகாயமடைந்த பாலச்சந்திரன், ஆத்திரமடைந்து வீட்டிற்கு சென்று தன் காரை ஓட்டி வந்து, பிரபாகரன் மளிகை கடையில் மோதி தள்ளினார். அதில், கடையின் முன்பகுதி சேதமடைந்தது.
அப்பகுதியில் இருந்தவர்கள், இரும்பு கம்பியால் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து பாலச்சந்திரனை சரமாரியாக தாக்கினர். அதன் பிறகே அவர் காரை நிறுத்தினார். சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பிரபாகரன் புகாரில், பாலச்சந்திரன் மீது வழக்கு பதிந்து காரை பறிமுதல் செய்தனர். காயமடைந்த பாலச்சந்திரன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை கொண்டு மளிகை கடையில் மோதிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.