ADDED : செப் 10, 2024 04:22 AM

அவிநாசி: ''சென்னை, அசோக் நகர் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு, வன்முறை துாண்டும் விதத்தில் பேசினாரா,'' என பா.ஜ., மூத்த தலைவர் ராஜா கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு தலைவர் ராஜா பேசியதாவது:
கடந்த மூன்று நாளில், ஒரு பெரிய சர்ச்சை மகாவிஷ்ணு என்ற சொற்பொழிவாளர் பள்ளிக்கூடத்தில் ஆன்மிகம் பேசியது. பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் பேசலாமா என கேட்கிறார்கள்.
ஆன்மிகம் பேசக்கூடாது சரி ஆனால் மதத்தை வளர்க்க என பள்ளிக்கூடம் திறந்து கொள்ளலாம் என்றால், அதுதான் திராவிட ஆட்சி.
தீதும் நன்றும் பிறர் தர வாரா. தீமைகள் யாரும் அடுத்தவர்களுக்கு கொடுத்து நமக்கு வருவதில்லை. பள்ளிக்கூடத்தில் சொற்பொழிவு ஆற்றியவரை கைது செய்வதற்கு, ஏ.டி.ஜி.பி., தலைமையில், 200 போலீசார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டை தாதா போல பேசுகிறார். 'என் ஏரியாவுக்கே நீ வந்துட்டே' என்கிறார். திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பற்றி, இந்த அமைச்சர் பேச மாட்டார்.
ஹிந்துக்களுக்கும், ஹிந்து கருத்துக்களும் எதிராகத்தான் திராவிட ஆட்சிக்காரர்கள் செயல் புரிவார்கள்.
மகாவிஷ்ணு ஆயுதம் ஏந்தவில்லை. வன்முறைக்கு தூண்டினாரா அதுவும் இல்லை. திருவள்ளுவர், திருமூலர் போன்றவர் கூறியதை சொற்பொழிவில் பேசி உள்ளார் அவ்வளவுதான்.
ஆனால், அதற்கு தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்து அச்சுறுத்துகிறார்கள்.
இவ்வாறு ராஜா பேசினார்.

