மின்னகம் சேவை மையம் பாதிப்பு புகார் அளிக்க முடியாமல் சிரமம்
மின்னகம் சேவை மையம் பாதிப்பு புகார் அளிக்க முடியாமல் சிரமம்
ADDED : ஆக 04, 2024 12:36 AM
சென்னை:'மின்னகம்' நுகர்வோர் சேவை மையம் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் செயல்படவில்லை. இதனால், மின் தடை தொடர்பாக புகார் அளிக்க முடியால், நுகர்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது. இங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம் வசூல் என, மின்சாரம் தொடர்பாக அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்.
அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு உட்பட்ட பிரிவு அலுவலக உதவி பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக, 24 மணி நேரமும் புகாரை பெற, ஒரு, 'ஷிப்டுக்கு' 60 பேர் என, மூன்று ஷிப்டில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சாதனங்களில் பழுது
சென்னை உட்பட பல்வேறு இடங்களில், இரவில் மின் சாதனங்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் தடை ஏற்படுகிறது.
இதனால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க, மின்னகத்தை தொடர்பு கொள்ளும் போது, இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மின்னகம் சேவை மையத்தில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொலைதொடர்பு துண்டிக்கப் பட்டது.
அதனால், சேவை மைய பணி எட்டு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியதால், நுகர்வோர் புகார் அளிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று காலை தான் மின்னகம் சேவை மையம் மீண்டும் செயல்பட துவங்கியது.
இதுகுறித்து, மின் வாரியத்தின், 'எக்ஸ்' தள பதிவில், 'மின்னகம் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதற்கு வருந்துகிறோம்; தொலைதொடர்பு சேவை வழங்குனர் பிரச்னையால், இரவு 9:00 மணி முதல் அழைப்புகள் செயல்படவில்லை.
'சேவையை விரைவாக மீட்டெடுக்க முயற்சிக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.
சரிசெய்யப்பட்டது
நேற்று காலை, 9:34 மணிக்கு, 'மின்னகம் சேவை சரிசெய்யப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
விரைவில் மழை காலம் துவங்க உள்ளது. எனவே, ஒரே சமயத்தில் அதிக புகார் பெற, இரவில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
தொலைதொடர்பு சேவை பாதிக்கப்படாத வகையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.