சாளுக்கிய மன்னன் கொக்கிலியின் தெலுங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
சாளுக்கிய மன்னன் கொக்கிலியின் தெலுங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : செப் 17, 2024 05:48 AM

சென்னை : கிழக்கு சாளுக்கிய மன்னன் கொக்கிலியின் தெலுங்கு கல்வெட்டு, ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்னம் கூறியதாவது: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சந்தாவரம் கிராமத்தில் இருந்த பலகைக் கல்லில், 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, தெலுங்கு எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு சாளுக்கிய மன்னனான கொக்கிலியின் காலத்தைச் சேர்ந்த இந்த கல்வெட்டு மிகவும் அரியது. இரண்டாம் ஜெயசிம்மவல்லபாவுக்கும், மூன்றாம் விஷ்ணுவர்தனாவுக்கும் இடையே, ஆறு மாதங்கள் அதாவது, 726, 727ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்தவர் கொக்கிலி.
இவர் குறித்த கல்வெட்டு ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டின் பெரும்பகுதி சேதம்அடைந்துள்ளது. படிக்கும் வகையில் உள்ள வரிகளின்படி, 'சூரிய கிரகணத்தின் போது, மத்துாரைச் சேர்ந்த பிராமண கணபஸ்வாமிக்கு, காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்த கொக்கிலி மன்னனால், 80 புட்லு நெல் விளையும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கல்வெட்டு படத்தை, எரகொண்டபாலத்தைச் சேர்ந்த, வி.ஆர்.ஓ., துரிமெல்ல ஸ்ரீனிவாச பிரசாத் அனுப்பினார். இவ்வாறு அவர் கூறினார்.