தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் அரசு பணிக்கான நிபந்தனையை எதிர்த்த மனு தள்ளுபடி
தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் அரசு பணிக்கான நிபந்தனையை எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : மே 30, 2024 11:40 PM
சென்னை:அரசு பணிக்கான தேர்வுகளில், தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், அடுத்த கட்டமாக பொது அறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனை சட்டத்தில், 2021ல் திருத்தம் வந்தது. அதில், அரசு பணிக்காக நடக்கும் தேர்வில், தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த சட்டத் திருத்தம் அடிப்படையில், 40 சதவீதம் எடுத்திருந்தால் மட்டுமே, அடுத்த கட்டமாக பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என, 2021 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரியில் வெளியீடு
இந்த அரசாணை அடிப்படையில், காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இதையடுத்து, தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்தும், தேர்வாணையத்தின் அறிவிப்பை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில், குரூப் - 4 தேர்வுக்கு தகுதி பெற்ற 10 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
மனுதாரர்கள் சார்பில், 'தமிழ் மொழித்தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் என இரு பிரிவாக, தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் எனவும், தமிழ் மொழித்தாளில் 40 சதவீதமாக 60 மதிப்பெண் பெற்றால் தான், அடுத்த கட்டமாக பொது அறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால், ஆங்கில வழியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவர்.
'தமிழ் வழியில் படித்தவர்களுக்கே, 100 சதவீதம் வழங்குவதாகி விடும்' என, தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அரசு ஊழியர்கள் பணி நிபந்தனை சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தத்தின் அடிப்படையில், ஏற்கனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
அரசு ஊழியர்களுக்கு, தமிழ் மொழியில் போதிய அறிவு இருக்க வேண்டும் என, பணி நிபந்தனை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசாணையும், தேர்வாணையத்தின் அறிவிப்பாணையும் சட்டப்படி தான் உள்ளது. சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக அரசாணை உள்ளது என, மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை.
போதிய தமிழ் அறிவு
பணிக்காக தேர்வு செய்யும் போது, தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அட்வகேட் ஜெனரல் கூறியபடி, குரூப் - 4 பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதால், தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும்.
சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். பணிகளை திறமையுடன் ஆற்ற, இது கண்டிப்பான நிபந்தனை தான்.
தகுதி தேர்வில், 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, அரசு நிர்ப்பந்திக்கவில்லை; 40 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால், மனுதாரர்கள், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் முடிவின் அடிப்படையிலேயே தேர்வு இருக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதில், எந்த தகுதியும் இல்லை. கொள்கை விஷயங்களில் தலையிடக்கூடாது என்ற நிலையில், நான் உடன்படுகிறேன்.
எனவே, சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில், பணிக்கான தகுதியை அரசு நிர்ணயிக்க முடியும். அதில், நீதிமன்றம் தலையிட தேவையில்லை. இந்த வழக்கில் தகுதி இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.