ஒப்புக்கு நடந்த கருத்துக்கேட்பு ஆவின் நடவடிக்கையால் அதிருப்தி
ஒப்புக்கு நடந்த கருத்துக்கேட்பு ஆவின் நடவடிக்கையால் அதிருப்தி
ADDED : ஆக 08, 2024 01:22 AM
சென்னை:ஆவின் பால் பொருட்களின் தரம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம், சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதுகுறித்து முறையான அறிவிப்பை, ஆவின் நிர்வாகம் வெளியிடவில்லை.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத், இணை இயக்குனர் பொற்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினர். இதில், தங்களுக்கு வேண்டப்பட்ட சில நுகர்வோர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
ஆவின் பால் பொருட்கள் தரம் குறித்து நல்ல கருத்துக்களை அவர்கள் எடுத்துக் கூறினர். ஆவினில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டவில்லை.
ஒப்புக்கு நடத்தப்பட்ட இந்த கூட்டம், நுகர்வோர் சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
மாநிலம் முழுதும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் அதிகளவில் உள்ளன. அரசிடம் இப்பட்டியல் உள்ளது. ஆனால், வேண்டப்பட்டவர்களை மட்டும் அழைத்து, ஆவின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. முறையாக கூட்டம் நடத்தினால், நுகர்வோர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால், இவ்வாறு செய்துள்ளனர். ஆவின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.