ADDED : மார் 09, 2025 04:58 AM
சென்னை: 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதால், மாநில அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவுக்கு நீட்டிப்பு வழங்கப்படவில்லை' என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆதிதிராவிடர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்களை கண்காணித்து, ஆலோசனை வழங்கவும், 1995ல் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக, 2017 ஏப்ரலில் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதன் பதவி காலம், 2020ல் முடிந்தது.
கடந்த, 2021ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயின சமூக மக்களின் உரிமையை சட்டப்பூர்வமாக பாதுகாக்க, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
எனவே, மாநில அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.