போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு
போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு
ADDED : ஆக 29, 2024 02:58 AM
சென்னை:மது விலக்கு வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, மாவட்ட அளவில் குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யும்படி, உரிய அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததும், அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, அப்புறப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக, மாவட்டம் தோறும் எஸ்.பி., தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில் கூடுதல் எஸ்.பி., அல்லது கூடுதல் துணை கமிஷனர் குழு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., மதுவிலக்கு உதவி கமிஷனர், அரசு மோட்டார் வாகன பராமரிப்பு மற்றும் பணிமனை ஆட்டோ மொபைல் பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இதற்கு முன், குழுவில் கலெக்டர் இருந்தார்; தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

