'நம்ம ஊரு' திருவிழாவுக்கு மாவட்டங்களில் கலைக்குழு தேர்வு
'நம்ம ஊரு' திருவிழாவுக்கு மாவட்டங்களில் கலைக்குழு தேர்வு
ADDED : மார் 12, 2025 11:48 PM
சென்னை:தமிழகத்தில் எட்டு இடங்களில் நடக்க உள்ள நம்ம ஊரு திருவிழாவுக்கு, மாவட்டந்தோறும், வரும் 22, 23ம் தேதிகளில், கலைக்குழு தேர்வு நடக்க உள்ளது.
தமிழர்களின் பண்பாடு, நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கும் நோக்கில், பொங்கல் பண்டிகையின்போது, சென்னையில், நம்ம ஊரு திருவிழா நடத்தப்படுகிறது.
கலை பண்பாட்டு துறை சார்பில், 18 இடங்களில் நடத்தப்பட்ட விழாவுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழகம் முழுதும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக, கோவை, தஞ்சை, வேலுார், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய எட்டு இடங்களில் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பறை, பம்பை, கைச்சிலம்பு கருவியிசை, இறை நடனம், துடும்பாட்டம், கிராமிய பாட்டு, பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுவினர், வரும் 22 தேதி, மாவட்ட கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, தங்கள் குழு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் உள்ளிட்ட நிகழச்சிகளை நடத்துவோர், மறுநாள் பதிவு செய்யலாம்.
இதில் பங்கேற்போரின் நிகழ்ச்சி, ஐந்து நிமிட வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அவற்றில் சிறந்த குழுக்களுக்கு, வாய்ப்பு வழங்கப்படும்.