தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவு வெளிப்பட்டு விட்டது: உதயகுமார் * முன்னாள் அமைச்சர் பேட்டி
தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவு வெளிப்பட்டு விட்டது: உதயகுமார் * முன்னாள் அமைச்சர் பேட்டி
ADDED : ஆக 20, 2024 10:09 PM
மதுரை:'' தி.மு.க.,வை பிரிவினைவாத சக்தி என பா.ஜ., கூறியது. தி.மு.க., தன் பங்குக்கு பா.ஜ., பாசிச அரசு என்றது. ஆனால் இன்றைக்கு இரண்டு பேரும் கைகோர்த்துள்ளனர். நாணய விழாவில் கள்ள உறவு வெளிப்பட்டுள்ளது'' என எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் 'ராஜ்நாத் சிங், தி.மு.க., கட்சிக்காரர்களை விட புகழ்ந்து பேசி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் எனக்கு துாக்கம் வரவில்லை' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்களால் தனக்கு துாக்கம் கெட்டு விட்டதாக கூறினார். துாக்கம் தொலைந்தால் உடம்புக்கு நல்லது அல்ல. லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது என பிரசாரம் செய்தார். ஆனால் இன்று, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள விழா எடுக்கிறார்.
'மாநில விழா அல்ல; மத்திய அரசு விழா தான்' என்று முழுப் பூசணிக்காயை மறைக்க பார்க்கிறார். இதை கேட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அரசியல் நாகரிகம் இல்லாமல் நையாண்டி பேசியுள்ளார். மத்திய அமைச்சரை வைத்து நாணய வெளியீட்டு விழாவை நடத்தியபோது பீகார், ஆந்திராவிற்கு நிதியை அள்ளித் தந்தது போல தமிகத்துக்கும் நிதியை அள்ளித் தாருங்கள் என்று ராஜதந்திரத்துடன் கேட்டிருக்கலாமே. தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை. மெட்ரோ மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. வறட்சி, வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக நிதி ஒதுக்கவில்லை. இச்சூழலில் அப்பா மீது உள்ள பாசத்தால,் தமிழகத்தை முதல்வர் காவு வாங்கி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

