தி.மு.க., கூட்டணி வேட்பாளரால் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சி ரத்து
தி.மு.க., கூட்டணி வேட்பாளரால் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சி ரத்து
ADDED : ஏப் 03, 2024 01:40 AM
ராசிபுரம்:தி.மு.க., கூட்டணி வேட்பாளரால் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சி ராசிபுரத்தில் ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். நேற்று சேலத்தில் இருந்து, கரூர் பொதுக்கூட்டத்திற்கு காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நாமக்கல் வழியாக சென்றார். செல்லும் வழியில் இருப்பதால், கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளை காங்., நிர்வாகிகள் செய்ய தொடங்கினர். ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் மாலை, 5:00 மணிக்கும், வெண்ணந்துாரில், 6:30 மணிக்கும் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
ராசிபுரத்தில் கூட்டணி கட்சி கொடிகள் கட்டப்பட்டன. செல்வப்பெருந்தகையும் மதியம், 1:00 மணிக்கே ராசிபுரத்தில் உள்ள தனியார் ேஹாட்டலுக்கு வந்துவிட்டார். நிகழ்ச்சிகள் குறித்து ஏற்கனவே வேட்பாளர் மாதேஸ்வரனிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் மாலை, 4:00 மணிக்கு மேல், மாதேஸ்வரன் ராசிபுரம் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், ராசிபுரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வெண்ணந்துாருக்கு வேட்பாளர் வந்ததால், அங்கு செல்வப்பெருந்தகை அவரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

