ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி
ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி
ADDED : பிப் 24, 2025 05:26 AM

திருப்பூர்: திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், முழுமையாக ஹிந்தியில் நேற்று நடத்தப்பட்டது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பீஹார், உ.பி., உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்திய கம்யூ., கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூர், ஏ.ஐ.டி.யு.சி., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது.
முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, திருப்பூர் முழுதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்றைய கருத்தரங்குக்கு, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால், கருத்தரங்கம் முழுதும் ஹிந்தியிலேயே நடத்தப்பட்டது.
ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் வஹிதா நிஜாம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக ஏ.ஐ.டி.யு.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஹிந்தியிலேயே பேசினார்.
நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழில் பேசிய எம்.பி., சுப்பராயன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோரது பேச்சுகள், ஹிந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டன.
தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ., சார்பில், முழுக்க முழுக்க ஹிந்தியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

