தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகள் உட்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை 'ரெய்டு'
தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகள் உட்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை 'ரெய்டு'
UPDATED : ஏப் 10, 2024 03:06 AM
ADDED : ஏப் 10, 2024 03:05 AM

சென்னை : சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது கூட்டாளி திரைப்பட இயக்குனர் அமீர் வீடு, அலுவலகம் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை, 35, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, டில்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக அவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது, டில்லியில் இருந்து மலேஷியா வழியாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, 45 முறை போதைப்பொருள் கடத்தி உள்ளேன். இதற்கு என் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
![]() |
போதைப்பொருள் கடத்தல் வாயிலாக, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தோம். இந்த பணத்தில், ஜே.எஸ்.எம்., ஸீ புட்ஸ், ஜூகோ ஓவர்சீஸ், ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ், ஜே.எஸ்.எம்.டி.பென்சிக் அபைர்ஸ் போன்ற நிறுவனங்களை துவக்கினோம்.
போதைப்பொருள் கடத்தி, சம்பாதித்த பணத்தில், கயல் ஆனந்தி நடித்த, மங்கை என்ற படத்தை தயாரித்தேன். அமீர் இயக்கத்தில், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து வருகிறேன்.
சென்னை புரசைவாக்கத்தில், ஜே.எஸ்.எம்., ரெசிடென்சி என்ற தனியார் தங்கும் விடுதியை நடத்தி வருகிறோம். அமீருடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வருகிறேன். என் வளர்ச்சிக்கு அமீர் பக்கபலமாக இருந்து வருகிறார் என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி, டில்லியில் தங்கள் அலுவலகத்தில், 12 மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
அத்துடன், ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியாக, தொழில் அதிபர்கள் அப்துல் பாஷித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்கள், ஜாபர் சாதிக் உடன் தொழில் பார்ட்னர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களையும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதை, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், சென்னை, தி.நகர் ராஜா தெருவில் உள்ள திரைப்பட இயக்குனர் அமீர் அலுவலகம், சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள, ஜே.எஸ்.எம்., ரெசிடென்சி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஜாபர் சாதிக் நடத்தி வரும் டீ கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள, புஹாரி ஹோட்டல் அதிபர் இர்பான் புஹாரி வீடு, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள அமீர் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும், சோதனை நடந்தது.
ஜாபர் சாதிக் சினிமா பட தயாரிப்பு நிறுவனம்வாயிலாக நிதியுதவி அளித்து, ஜாக்கி என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராக, சென்னை கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ரகு என்பவர் பணிபுரிந்துள்ளார். இவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என, சென்னையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று காலை, 7:00 மணியில் இருந்து மாலை, 7:30 மணி வரை, 70க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப்படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
தி.மு.க., மாவட்ட செயலர் சிற்றரசு வீட்டிலும் சோதனை நடந்ததாக தகவல் பரவியது. ஆனால், இதை சிற்றரசு மறுத்து விட்டார்.


