கள்ளச்சாராய சாவுகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளச்சாராய சாவுகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2024 12:31 AM

திண்டிவனம்:'கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக செயலிழந்து விட்டதைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம் மற்றும் செய்யூரில், கள்ளச்சாராயம் குடித்து 30க்கு மேற்பட்டோர் இறந்தனர். அதன் பிறகாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு, கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். இதைச் செய்ய அரசு தவறிவிட்டது.
கல்வராயன் மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.
போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆளுங்கட்சியின் முழு ஆதரவு இருக்கிறது.
கள்ளச்சாராய சாவு காரணமாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மலையரசனுக்கு வாழ்த்து பேனர் வைத்துள்ளார்.
கள்ளச்சாராய சாவுகளை தடுக்கத் தவறியதால், உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு ஆகியோர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

