விஜயை கண்டு தி.மு.க.,வுக்கு பயம்: குண்டு போடும் 'மாஜி' ஜெயகுமார்
விஜயை கண்டு தி.மு.க.,வுக்கு பயம்: குண்டு போடும் 'மாஜி' ஜெயகுமார்
ADDED : செப் 04, 2024 06:41 AM

சென்னை: ''தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. நடிகர் விஜயை கண்டு தி.மு.க., பயப்படுகிறது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
'பார்முலா - 4' கார் பந்தயத்தை சென்னைக்கு வெளியே நடத்தி இருக்கலாம். சென்னையில் நடத்தியதால், அனைத்து அரசு துறைகளும், ஒன்றரை மாதங்களாக, பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாமல், கார் பந்தயத்தில் கவனம் செலுத்தினர்.அதாவது, 10,000 பேர் மகிழ்ச்சிக்காக, 10 லட்சம் பேரை சிரமத்திற்கு உள்ளாக்கினர்.
காவிரியில் அணை கட்டுவது குறித்து, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் இங்கு வந்து பேசுகிறார். அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கூற வேண்டும். அவர், துணை முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
முதல்வர் இல்லை; மூத்த அமைச்சர் இல்லை; தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என சொல்வதற்குக்கூட ஆள் இல்லை.
முதல்வர் அமெரிக்காவில் 'போட்டோ ஷூட்' நடத்துகிறார். டிரைவர் இல்லாத காரில் செல்கிறார். இங்கு, தாசில்தார்கள் காரை தள்ளிக் கொண்டு செல்கின்றனர். இது, தள்ளுவண்டி அரசாக உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க., கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்தான். முருகன் மாநாடு நடத்தியது கம்யூனிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறிவிட்டு, பா.ஜ.,வை திருப்திபடுத்த, பழனியில் முருகன் மாநாடு நடத்தினர்.
பா.ஜ.,வுடன் கொஞ்சிக் குலாவுகின்றனர். சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற கருத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம்; மாநாடு நடத்தலாம். விஜய் கட்சி ஆரம்பித்தால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயம் வந்து விட்டது. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.