தும்பை விட்டு வாலை பிடிக்குது தி.மு.க., அரசு: பன்னீர்செல்வம்
தும்பை விட்டு வாலை பிடிக்குது தி.மு.க., அரசு: பன்னீர்செல்வம்
ADDED : மே 27, 2024 04:10 AM
சென்னை : முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்ட முயற்சிக்கும், கேரள அரசுக்கும், மூடி மறைத்த தி.மு.க., அரசுக்கும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மக்களின் உயிர் நாடியாக விளங்கும்,முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கேரள அரசு கருத்துரு அனுப்பி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள அரசின் இந்த நடவடிக்கை, தமிழகத்திற்கு உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சி.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில், 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை பகுதியில், பராமரிப்பு பணிகள் செய்ய வசதியாக, அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமான பொருட்களை எடுத்து செல்லவோ, கேரள அரசு மறுத்து வருகிறது.
தற்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், பழைய அணையை இடிக்கவும், புதிய அணையை கட்டவும், மத்திய அரசை அணுகி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்.
கேரள அரசின் இந்த நடவடிக்கை, முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள, தமிழகத்தின் பல மாவட்டங்களை, பாலைவனமாக்கும் செயல்.
தமிழகத்திற்கு எதிரானநடவடிக்கை, ஜனவரி மாதமே தி.மு.க., அரசுக்கு தெரிய வந்தும், லோக்சபா தேர்தலையொட்டி மறைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வந்துள்ளது. இது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக, இதுபோன்ற செயலை செய்து விட்டு, தற்போது மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவது, தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயல். இந்த கடிதத்தை ஜனவரி மாதமே, மத்திய அரசுக்கு எழுதி இருந்தால், சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீடு குழுவின் பரிசீலனைக்கே, இந்த பிரச்னை சென்றிருக்காது.
தி.மு.க., அரசின் அரசியல் ஆதாயம் காரணமாக, இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீடு குழுவின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருக்கிறது. தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அறிக்கையில் பன்னீர் கூறியுள்ளார்.

