தி.மு.க., ஆதரவு விவகாரத்தில் பீட்டர் - வேலுச்சாமி மோதல்
தி.மு.க., ஆதரவு விவகாரத்தில் பீட்டர் - வேலுச்சாமி மோதல்
ADDED : ஆக 16, 2024 08:01 PM
தமிழக காங்கிரஸ் கட்சியில், முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்சுக்கும், மாநில நிர்வாகி திருச்சி வேலுச்சாமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
சமீபத்தில், தனியார் 'யு டியூப் சேனல்' ஒன்றுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி:
கூட்டணி இல்லாமல், தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, வரும் 50 ஆண்டுகளுக்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பலமான கூட்டணி, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதில் கை வைப்பது தேன் கூட்டை கலைப்பது போன்றது.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால், முதலில் நம்மை அதற்கு தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கூட்டணி வேண்டாம் என்பவர்கள், வெறும் கையை வீசி நடப்பவர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவருக்கு பதிலடி தரும் விதமாக, திருச்சி வேலுச்சாமி அளித்த பேட்டி:
பீட்டர் அல்போன்ஸ் அப்படி பேசுவது பைத்தியக்காரத்தனம். செல்வப்பெருந்தகை தலைவரானதும், 6 மாதங்களில், 73 மாவட்டங்களில், 70 ஆய்வுக் கூட்டம் நடத்தி விட்டார். நானே 4 பயிற்சி பட்டறை நடத்தி இருக்கிறேன். இதெல்லாம் காங்கிரசை வைத்து வியாபாரம் செய்கிற பீட்டர் அல்போன்ஸ்க்கு தெரியாது.
காங்கிரஸ் தான் ஆட்சியில் இல்லையே, பின் ஏன் மானங்கெட்டுப் போய், தி.மு.க., ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ் பதவி வாங்க வேண்டும்.
கூட்டணியில் பதவி வாங்கியதாக கூறினால், அவரை மாதிரி, 4 பேருக்கு அமைச்சர் பதவி, தி.மு.க., அரசில் கொடுக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறேன் என்றால், அவர் காங்கிரசை விட்டு ஓடி போகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாளர்கள் மயிலை அசோக், அடையாறு ரவி உள்ளிட்ட சிலர், திருச்சி வேலுச்சாமியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள விபரம்:
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என, முத்திரை குத்தப்பட்டு, காங்கிரஸ் தலைவர்களாலும், தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்ட திருச்சி வேலுச்சாமி, பீட்டரை அவன், இவன் என்றும், பைத்தியக்காரன், மானங்கெட்டவன் என்றும் பேசியது கண்டிக்கத்தக்கது.
சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாத நேரத்தில், பேட்டி அளித்த திருச்சி வேலுச்சாமியின் குரல், செல்வப்பெருந்தகை குரலாகவே பார்க்கப்படும். இதை ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால், கட்சியில் கட்டுப்பாடற்ற நிலைமை உருவாகும். எனவே, திருச்சி வேலுசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
***