'தி.மு.க., பொய்களை மக்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது!': அண்ணாமலை
'தி.மு.க., பொய்களை மக்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது!': அண்ணாமலை
ADDED : ஏப் 15, 2024 12:55 AM
சென்னை: 'தி.மு.க.,வின் பொய் கதைகளை, மக்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மூன்று ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சி வெற்று விளம்பரத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை தற்போது மக்களுக்கு தெரியவந்ததும், அவர் பதற்றத்தில் மாற்றி மாற்றி பேசுகிறார்.
சிறிய கடைகளில் வேலைக்கு சேர கூட கணக்கு என்ற அடிப்படை தகுதி தேவைப்படும் நிலையில், கோபாலபுரம் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தினால், அமைச்சரான உதயநிதி, 'மத்திய அரசு, 1.79 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்திருந்தும், 29 காசு தான் கொடுத்திருக்கிறது' என, ஊர் ஊராக பொய் சொல்லி வருகிறார். உங்கள் பொய் கதைகளை, மக்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது.
தமிழக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்றவற்றை மேம்படுத்த செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் போன்றவற்றை எந்த கணக்கில் வைப்பீர் ஸ்டாலின்?
தி.மு.க., 'ஸ்டிக்கர்' ஒட்ட முடியாத காரணத்தால், அவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்றாகி விடுமா? அதுமட்டுமின்றி, மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் கொள்ளையடித்த, 30,000 கோடி ரூபாய் எந்த கணக்கில் வரும்?
விரைவில் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். 'டாஸ்மாக்' வருமானம் துவங்கி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என, தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்தும், அரசு பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனரே ஏன்?
ஆனால், தமிழக அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கின்றனவே எப்படி? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?
மதுரை எய்ம்ஸ் 2026ல் செயல்பாட்டிற்கு வருவது உறுதி என்பது மக்களுக்கு தெரியும். அது, மோடியின் உத்தரவாதம். ஆனால், நீங்கள் தருவதாக சொன்ன விடியல் எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

