ADDED : பிப் 22, 2025 12:45 AM
சென்னை : அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறினார்.
தமிழக -மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க., மாணவர் அணி செயலருமான எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி.அரவிந்த்சாமி முன்னிலை வகித்தனர்.
'பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., குறித்தும், மாணவர்களின் உரிமையை பறிக்கும் பா.ஜ., அரசு குறித்தும் தெருமுனை கூட்டங்கள், இணையதளங்கள் வாயிலாக பிரசாரம் செய்யப்படும்.
மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து, எழிலரசன் கூறுகையில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்துக்கு தேவையான கல்வி நிதியை ஒதுக்க மாட்டேன் என விடாப்பிடியாக அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, தமிழகத்துக்கான கல்வி நிதி ஒதுக்கப்படும், என்கிறார்.
''மாநில அரசின் உரிமையில் தலையிட்டு, வம்படியாக பேசும் தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, வரும் 25ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசு அலுவலகங்களை நோக்கி பேரணியும் நடத்த தீர்மானித்துள்ளோம்,” என்றார்.