காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் களேபரம்; மேயரை பூட்டி வைக்க தி.மு.க.,வினர் முயற்சி
காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் களேபரம்; மேயரை பூட்டி வைக்க தி.மு.க.,வினர் முயற்சி
ADDED : செப் 04, 2024 06:14 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், நேற்று நடந்த கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றிய பின் வெளியே வர முயன்ற தி.மு.க., மேயரை பூட்டி வைக்க நடந்த முயற்சியால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, அக்கட்சியின் கவுன்சிலர்களே போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து மேயர் மீது, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
தர்ணா
கட்சியின் மேலிட சமரசத்தை அடுத்து, கூட்டத்தில் பங்கேற்காமல் தி.மு.க., கவுன்சிலர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
மேயருக்கு எதிராக தி.மு.க.,வினரே போர்க்கொடி உயர்த்தியதால் மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின், காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் முதலில் வந்தனர். இதையடுத்து, எதிர்ப்பு கவுன்சிலர்கள் பதிவேட்டில் கையெழுத்திடாமல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக பொறுப்பேற்ற நவேந்திரனை, கவுன்சிலர்களுக்கு மேயர் அறிமுகம் செய்தார். தொடர்ந்து தீர்மானங்கள் தாக்கலாகின.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'குரல் ஓட்டெடுப்பு நடத்தி ஒவ்வொரு தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும்' என, வாக்குவாதம் செய்து, தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். மற்றொரு புறம், தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களுக்குள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் மேஜையை தட்டுவதும், மைக்கை தட்டி விட்டு உடைக்கும் சம்பவங்களும் அரங்கேறின.
கூட்ட அரங்கின் வாயிலிலும், பார்வையாளர் அறையிலும் இருந்த பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், அரசியல் கட்சியினரும் சேர்ந்து கூச்சலிட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக, கவுன்சிலர்களிடையே கூச்சல் குழப்பம் நீடித்தது.
வாக்குவாதம்
இதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றபட்டதாக மேயர் மகாலட்சுமி அறிவித்தார். பின், மேயர் மகாலட்சுமி, கமிஷனர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
அப்போது, வெளிப்புறத்தில் இருந்த சிலர், கதவை வெளிப்புறமாக மூடி தாழிட்டனர்.
மேயர் ஆதரவு தி.மு.க., கவுன்சிலர்களும், அக்கட்சியினர் வாக்குவாதம் செய்து கதவை திறந்தனர். அதன்பின் மேயர் மகாலட்சுமி வெளியேறினார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட 33 எதிர்ப்பு கவுன்சிலர்கள், துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்டோர் அண்ணா அரங்கம் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'தீர்மானங்களை முறையாக நிறைவேற்றவில்லை' எனக்கூறி, முழக்கமிட்டனர்.
பின், துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில், 33 கவுன்சிலர்களும், மாநகராட்சி அலுவலகம் வரை நடந்து சென்று, மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால், அங்கு கமிஷனர் இல்லாததால் திரும்பி சென்றனர்.