தேர்தல் விளம்பரத்துக்கு சான்று தராத ஆணையம் மீது தி.மு.க., வழக்கு
தேர்தல் விளம்பரத்துக்கு சான்று தராத ஆணையம் மீது தி.மு.க., வழக்கு
ADDED : ஏப் 14, 2024 06:14 AM
சென்னை : தி.மு.க.,வின் தேர்தல் விளம்பரங்களை, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்ப, சான்றிதழ் வழங்க மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:
அரசியல் கட்சிகள், 'டிவி' சேனல்களிலும், 'கேபிள் நெட்ஒர்க்' வாயிலாகவும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கான வழிமுறைகளை, தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதன்படி, இணை தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான, மாநில அளவிலான சான்றிதழ் குழு, அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்க கோரும் மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.
தி.மு.க., சார்பில், 'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற தலைப்பில், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்காட்டி, 'டிவி' விளம்பரங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு, மாநில அளவிலான சான்றிதழ் குழுவிடம் விண்ணப்பித்தோம்.
சான்றிதழ் அளிக்க, மாநில சான்றிதழ் குழு மறுத்து விட்டது. ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பதாகவும் காரணங்களைக் கூறியது.
மாநில சான்றிதழ் குழுவின் உத்தரவு, தெளிவில்லாமல் உள்ளது. தி.மு.க.,வை குறிவைத்து, மற்ற மாநில, தேசிய அளவிலான அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் உள்ளன. மாநில சான்றிதழ் குழு உத்தரவை எதிர்த்து, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஏற்கனவே நிராகரித்த உத்தரவை, தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்து, கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார். எங்கள் தரப்பைக் கேட்கவில்லை. சரிவர பரிசீலிக்காமல், இயந்திர கதியாக, எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து, தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
எனவே, தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, எங்கள் விளம்பர வீடியோக்களுக்கு சான்றிதழ் வழங்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி அமர்வில், நாளை விசாரணைக்கு வருகிறது.

